பள்ளி நாட்களில் நான் இரவு சாப்பிடும் போதே உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவேன். சில சமயம் ஹாலில் எங்காவது தூங்கிக் கொண்டிருக்கும் என்னை என் அப்பா படுக்கை விரித்து அப்படியே நகர்த்தி விடுவார். காலையில் எழுந்தால் இரவு சாப்பிட்டேனா என்று பல முறை யோசித்ததுண்டு. அம்மா, பாட்டியிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வேன்.
கல்லூரி நாட்களிலும் நான் அதிகம் கண் விழித்ததில்லை. நான் தினமும் கல்லூரி (110 கிமீ போக வர) சென்று வந்தது ஒரு காரணம் மற்றும் அப்பொழுது இணையம், தொலைக்காட்சி நிக்ழ்ச்சிகள் இல்லாதது இன்னொரு காரணம். பரீட்சை நாட்களில் கூட அதிகம் போனால் 11 மணி வரைக்கும் தான் விழித்திருப்பேன்.அதுவும் 9 மணியில் இருந்து பல தடவை சாமியாடி அப்பா, "இதுக்கு பேசாம படு" என்று சொல்லிய பிறகு.நான் பல தடவை சொல்லியும் எனது சக மாணவர்கள் நம்பியதில்லை.
எந்த சூழ்நிலையிலும் (ஒலி, ஒளி) எனது தூக்கம் கெட்டதில்லை.இது பெருமையா என்று எனக்கு தெரியவில்லை. அதிகாலையில் தான் என்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றிய ஒரு பிரக்ஞை ஏற்படும். நடு ராத்திரியில் வீட்டுக்கு யாராவது வந்தால் விடிகாலை வரை வீட்டுக்கு காவல் நிற்க வேண்டியது தான். என் அம்மா, பாட்டி ஏதாவது கோவில் விழாக்களுக்கு சென்றால் வெளியில் பூட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். நான் தான் இப்படி என்றால் என் நண்பன் ஸ்ரீகாந்த் எனக்கும் மேல். அவனை விடிகாலையிலும் எழுப்ப முடியாது :)
இதில் யாராவது இரவு சரியாக தூங்கவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.இதுவும் ஒரு வரமோ என்னவோ? கடவுளுக்கு நன்றி!
- NSR.
No comments:
Post a Comment