ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் - பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்,
உண்டாம் எனக் கேளீரோ.
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எதனூடு
நின்றோங்கும் அறிவு ஒன்றே தெய்வம்
ஓதி அறியீரோ.
சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ.
வேடம் பல்கோடி ஒரு உண்மைக்குள் உள்ளது
என்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வதை
வேதம் அறியாதே.
நாமம் பலகோடி ஒரு உண்மைக்குள் உள்ளது.
என்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வதை
நான்மறை கண்டிலதே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகள் எல்லாம் - நீவிர்
அவலை நினைத்து உமி மெல்லுதல் போல்
இங்கவங்கள் புரிவீரோ!
உள்ளது அனைத்திலும் உள் ஒளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற்கரிய பிரமம் ஒன்றே மறை
கூவுதல் கேளீரோ!
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ!
ஒன்று பிரமம் உளது உண்மை - அது உன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அது உன்
உணர்வெனக் கொள்வாயே.
- பாரதி
No comments:
Post a Comment