
அது ஐன்ஸ்டைன் அவ்வளவாக பிரபலமடையாத நேரம். ஆனாலும் அவரைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகியுள்ள காலக்கட்டம். புவியீர்ப்பை பற்றிய அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியின்றன். ஜெர்மனியின் சர்வாதிகாரம் பிடிக்காமல் குடியுரிமையை துறந்து சுவிட்சார்லாந்தில் மனைவி மிலேவா மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். அப்பொழுது மேக்ஸ் பிளாங்க் அவரைக் காண வருகிறார். அவருக்கு பேராசிரியர் பணி, 12000 மார்க் சம்பளம் மற்றும் குடியுரிமை ஜெர்மன் அளிப்பதாக சொல்லி அவரை அங்கு வந்து ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளச் சொல்கிறார். அறிவியலுக்காக சில தியாகங்கள் தேவை என்கிறார்.
அதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் அவர் ஏதாவது முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினால் அந்த பெருமை ஜெர்மனியைச் சேர வேண்டும் என்பது தான். ஐன்ஸ்டைன் அங்கு போவதற்கு தயக்கம் காட்டுகிறார். அதற்கு ப்ளாங்க் ரயில் டிக்கெட்டைக் கொடுத்து பின்னர் அவரின் மனம் மாறும் போது வர சொல்லி செல்கிறார். ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவாவும் ஒரு இயற்பியல் வல்லுனர். அவர் தன் கணவரிடம் அவரது ஆராய்ச்சியைப் பற்றி சதா கேட்டுக் கொண்டிருக்கிறார். சில சமயம் அவரது குறிப்புகளை ஆராயவும் செய்கிறார். ஆனால் ஐன்ஸ்டைன் தனது சமன்பாடுகளில் புது வகையான குறியீடுகளைப் பயன்படுத்துகிறார். அவரது ஆராய்ச்சியில் தன்னை ஏன் பயன்படுத்தவில்லை, தன்னிடம் ஏன் அதைப் பற்றி தெரிவிப்பதில்லை என்று மிலேவா கேட்பது ஐன்ஸ்டைனுக்கு பிடிப்பதில்லை. பிறகு ஐன்ஸ்டைன் குடும்பத்தைப் பிரிந்து ஜெர்மனி செல்கிறார்.
எடிங்க்டன் அவரது சகோதரியுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்தின் தலைச்சிறந்த அளவியல் நிபுணர் அவர் மற்றும் ராயல் அஸ்ட்ரானமிக் சொஸைட்டியின்(RAS) உறுப்பினர். RAS அவரை ஐன்ஸ்டைனின் கட்டுரைகளை ஆராய சொல்கிறது. ஏனென்றால், அவர்களைப் பொறுத்த வரை ஐசக் நியுட்டனின் புவியீர்ப்பு விதிகளே இறுதியானவை மற்றும் மாறுபாடு இல்லாதவை. அவர் கடவுளுக்கும் இடம் விட்டு சென்றிருக்கிறார் என்பது அவர்களது கருத்து (ஆனால் நியுட்டன் காலத்தில் அவரை எத்தனைப் பேர் எதிர்த்தார்கள் என்பது வேறு விஷயம்).
எடிங்க்டன் ஐன்ஸ்டைனின் கட்டுரைகளைப் படிக்கிறார். அதில் ஏதோ ஒன்று இருப்பதாக தன் சகோதரியிடம் சொல்கிறார். அங்கு கடை நடத்தும் ஒரு ஜெர்மானிய குடும்பத்தினரை ஒரு கூட்டத்தினர் தாக்குவதை தடுத்து அவர் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரும் அவரது சகோதரியும் "குவார்க்கர்ஸ்" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மனிதாபிமானம் மற்றும் மத நல்லிணக்கம் முக்கியமான ஒன்று.
அந்த ஜெர்மானியக் குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக எடிங்க்டன் அவமானப் படுகின்றார். RAS-ம் அவர் மேல் கோபம் கொள்கிறது. ஒரு நாள் அந்த ஜெர்மானிய பெண்ணிற்கு கிரக மாதிரிகளை காண்பிக்கும் போது (டெமோ) அவர் புதனின் (Mercury) சுற்றுப்பாதையை கவனிக்கிறார். அது நியுட்டனின் விதிகளுக்குள் அடங்க வில்லை. உடனே இதை விவரித்து இதற்கு என்ன காரணம் என்று கேட்டு ஐன்ஸ்டைனுக்கு கடிதம் எழுதுகிறார்.
ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவருக்கு அங்கு நிலவும் மனிதாபினாமற்றச் செயல்கள் பிடிப்பதில்லை. அவரது சொந்தக்காரப் பெண் எல்ஸாவை பார்க்கிறார். அவர்களுக்குள் ஒரு உறவு ஏற்படுகிறது. அதற்கு ஒரு காரணம் அவளது இசை ஈடுபாடு மற்றும் அவளுக்கு இயற்பியலைப் பற்றி ஒன்றும் தெரியாததும் தான். அவர் வேலைச் செய்யும் போது ஒரு குறுக்கீடும் இருக்க கூடாது என்று ப்ளாங்கிடம் ஏற்கனவே நிபந்தனை வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஸ்பான்ஸர் செய்யும் தொழில் அதிபர் அவரால் போருக்கு என்ன ஆதாயம் செய்ய முடியும் என்ற ரீதியில் பேசுகிறார். ப்ளாங்க் அவரின் கண்டுபிடிப்பு மட்டும் சாத்தியமானால் அறிவியல் வழியாக இங்கிலாந்து போன்ற நாடுகளை வெற்றி அடையலாம் என்று சமாதானம் சொல்கிறார்.
புதனின் சுற்றுப்பாதைக்கான விளக்க்கம் குறித்து ஐன்ஸ்டைனும் பதில் எழுதுகிறார். அந்த சமயம் ஒரு போர் தாக்குதலில் சுமார் 15000 இங்கிலாந்து படையினரை ஜெர்மனி குளோரின் வாயுவைப் பயன்படுத்தி கொல்கிறது. அதனால் இங்கிலாந்தில் ஜெர்மானிய அறிவியல் சஞ்சிகைகளைத் தடை செய்கிறது. எடிங்க்டனையும் ஐன்ஸ்டைனுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
ஒரு நாள் ஐன்ஸ்டைன் அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் பறவைகளை வைத்து விஷவாயு பரிசோதனை செய்வதைக் கண்டு அதிர்ச்சி மற்றும் கோபம் அடைகிறார். பிறகு ப்ளாங்க் ஒரு மேனிஃபெஸ்டோவில் (Manifesto of 93) கையெழுத்திட சொல்கிறார். அது என்னவென்றால் ஜெர்மனியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு அறிவியலாளர்களும் உடன்படுவதாக. பல பிரபல விஞ்ஞானிகள் கையெழுத்திட்டாலும் ஐன்ஸ்டைன் அதற்கு மறுக்கிறார். இதனால் அவர் மேல் கோபமடைந்து அவரை அங்கு நுழைய அனுமதி மறுக்கிறார்கள்.இதற்கு நடுவில் அவரை குழந்தைகளுடன் காண வரும் மிலேவா அவரை எல்ஸா சந்திக்க வருவதைக் கண்டு சந்தேகம் மற்றும் கோபம் அடைந்து திரும்பி சென்று விடுகிறாள். பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஐன்ஸ்டைன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அலைகிறார்.
பிறகு ஒரு நாள் எல்ஸாவை சந்திக்க் செல்லும் போது அவளும் அவரை பார்க்க தயங்குகிறாள். தெருவில் நடந்து வரும் போது வண்டிகள் இவரைக் கண்டு தானாக பாதை மாறி செல்வதைக் கண்டு இவருக்கு பொறி தட்டுகிறது. கிரகங்களின் பாதையும் இவ்வாறு இருக்கும் என்று அனுமானித்து ஒரு புதிய புவி ஈர்ப்பு தியரியை எழுதுகிறார். அவருக்கு வரும் கடிதங்கள் பல்கலைக்கழக முகவரிக்கு வருவதால் அவர் ப்ளாங்கிடம் அனுமதி கேட்டு கெஞ்சுகிறார். பிறகு எடிங்க்டனுக்கு இதை ஒரு கடிதமாக ப்ளாங்கிடம் கொடுத்து அனுப்பச் சொல்கிறார்.
அவருடைய இப்புதிய புவியீர்ப்பு விளக்கத்தைப் படிக்கும் எடிங்க்டன் அசந்து போகிறார். இது கண்டிப்பாக நியுட்டனின் கருத்துகளை மாற்றும் திறனுடையது என்கிறார். அதை ஒரு துணி, ரொட்டி, ஆப்பிள் வைத்து அருமையாக விளக்குகிறார். பிறகு இனிமேல் ஒன்று நியுட்டன் அல்லது ஐன்ஸ்டைன் இருவரில் ஒருவர் கருத்தே உண்மை என்கிறார். இதை நிருபணம் செய்ய வரும் சூரியக் கிரகணத்தின் போது நட்சத்திரத்தின் இருப்பைக் கணக்கிடுவது தான் சிறந்த வழி என்று தீர்மானிக்கிறார். அதாவது ஐன்ஸ்டைனின் கொள்கைப்படி சூரியனுக்கு அருகில் வரும் நட்சத்திர ஒளியானது அதன் புவி ஈர்ப்பினால் வளையும். இதை புவி ஈர்ப்பு விலகல் (Gravitational lensing) என்று அழைக்கிறார்கள். அதற்காக RAS தலைவரிடம் ஆப்ரிக்கா செல்ல அனுமதி வாங்கி கொண்டு செல்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் இதன் மூலம் நாம் ஒன்று நியுட்டனின் கருத்தை உறுதிப்படுத்தலாம் அல்லது ஐன்ஸ்டைனின் கருத்தைப் பரிசோதிக்கலாம் என்பதே.
உடல் நலமின்றி இருக்கும் ஐன்ஸ்டைன் சுவிட்சர்லாந்திற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்திக்கிறார். அவர்களுக்கு விவாகரத்தாகிறது. ஆப்ரிக்காவிற்கு ஒரு உதவியாளருடன் எடிங்க்டன் செல்கிறார். அங்கு மழையும், மேகமுமாக இருக்கிறது. இதன் நடுவில் புகைப்பட பேழைகளும் பழுதடைகின்றன. கிரகணத்தன்று மழையும் நின்று, மேகமும் கலைந்து அவரை நட்சத்திர இருப்பை படம் பிடிக்க உதவுகிறது. பிறகு இங்கிலாந்திற்கு திரும்பும் எடிங்க்டன் அனைவருக்கும் முன்பாக முடிவுகளைப் பரிசோதிக்கிறார். அதற்கு முன் அவருடன் வந்தவர் சோதனையைப் பற்றி விளக்குகிறார். பிறகு எடிங்க்டன் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது ஒளி விலகல் நடந்தது நிருபணமாகிறது. RAS-ன் தலைவரும் சில உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்கின்றனர்.
இதன் மூலம் ஐன்ஸ்டைன் பிரபலமாகிறார். அவரை மீண்டும் ஜெர்மனிய விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர். அவரை பேட்டி எடுக்க வரும் போது நாக்கைத் துருத்திய படி போஸ் கொடுக்கிறார். எல்ஸாவுடன் இணைகிறார். பிறகு ஒரு அறிவியல் சந்திப்பிற்கு செல்லும் போது அவர் எடிங்க்ட்னை சந்திக்கிறார். இருவரும் கைக்குலுக்கி நன்றி தெரிவிக்கின்றனர்.
ஒரு முக்கியமான அறிவியல் கட்டத்தை BBC சற்று மசாலாவுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் வேடத்தில் ஏண்டி செர்கிஸ் (Andy Serkis) நடித்திருக்கிறார். இவர் Lord of the rings படத்தில் கோலம் (Gollum) கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டியவர்.

இதில் ஐன்ஸ்டைன் சொல்லும் ஒரு வாசகம் முக்கியமானது.
" நம்மால் முடிந்த வரை முழு முயற்சியுடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நாம் குற்றவாளிகள் தாம்"
P.S. Trailer
- NSR.